search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இன்டர்நெட் வசதி"

    உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏராளமான மலை கிராமங்களுக்கு காற்றில் மிதக்கும் பலூன் மூலம் இன்டர்நெட் சேவை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
    டேராடூன்:

    நாடுமுழுவதும் செல்போன் இன்டர்நெட் சேவைகளை பெறுவதற்காக நகர்ப் பகுதிகள் ஆங்காங்கே செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டு இணைப்பு வழங்கப்படுகிறது.

    தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப்பிரதேசங்களில் செல்போன் டவர்கள் அமைப்பதில் சிரமங்கள் உள்ளன. அதற்கு கூடுதல் செலவு பிடிக்கும். மேலும் செல்போன் இன்டர்நெட் இணைப்புகள் சரிவர கிடைப்பது இல்லை.

    இது போன்ற பகுதிகளில் பயன்படுத்துவதற்கு மும்பை ஐ.ஐ.டி. காற்றில் பறக்கும் பலூன் மூலம் செல்போன்-இன்டர்நெட் இணைப்பு பெறும் வசதியை கண்டுபிடித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏராளமான மலை கிராமங்களுக்கு இதன் மூலம் செல்போன் இன்டர்நெட் இணைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    முதலாவது ஏர்பலூன் இன்டர்நெட் சேவை வசதியை உத்தரகாண்ட் மாநில முதல்-மந்திரி திரிவேந்திர சிங் ரவத் டேராடூனில் நடந்த நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.

    இதற்கு ரூ.50 லட்சம் செலவாகும். இது ஏரோஸ் டாட் டெக்னாலஜி முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. 6 மீட்டர் நீளம் கொண்ட பலூனில் நைட்ரஜன் வாயு நிரப்பப்பட்டு இருக்கும். தரையில் இருந்து ரிமோட் மூலம் இயங்கக்கூடியது. அதில் டிரான்ஸ்ரிசீவர் ஆன்டெனா கருவி பொருத்தப்பட்டு இருக்கும். இதன் மூலம் இன்டர்நெட் சேவை வழங்க கூடிய மோடம் இணைக்கப்பட்டு வைபை வசதி மூலம் செல்போன் மற்றும் இன்டர்நெட் இணைப்புகள் கிடைக்கும். 7.5 கி.மீ. சுற்றளவுக்கு இணைப்புகள் கிடைக்கும்.

    இந்த சுற்றளவுக்குள் இருப்பவர்கள் பாஸ்வேர்டு இல்லாமலேயே வைபை மூலம் இணைப்பு பெறலாம். தொடக்கத்தில் இன்டர்நெட் இணைப்புகளை இலவசமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

    உத்தரகாண்ட்டில் இமயமலைப் பகுதியில் உள்ள 16,870 கிராமங்களில் 680 கிராமங்களுக்கு இந்த பறக்கும் பலூன் மூலம் இன்டர்நெட்-செல்போன் இணைப்புகள் வழங்கப்படும்.

    இது தொலைதூர பகுதிகளுக்கு இன்டர்நெட் வசதி இல்லாத கிராமங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் வெள்ளம் போன்ற அவசர காலங்களுக்கு உதவவும் பயனுள்ளதாக இருக்கும் என்று முதல்-மந்திரி ரவத் தெரிவித்தார். #Tamilnews
    ×